என் மலர்
இந்தியா
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்தவற்றை மறந்துவிடக் கூடாது: ராகுலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் பதில்
- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பது,
- மருத்துவமனை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீது கேள்விகளை எழுப்புகிறது- ராகுல் காந்தி.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு எதிர்ப்பு நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கேட்டு மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பது மருத்துவமனை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீது கேள்விகளை எழுப்புகிறது" என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் குணால் கோஷ் பதில் கொடுத்துள்ளார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனத் தெரிவித்த குணால் கோஷ் "இதுபோன்று கருத்து தெரிவிக்கும்போது, ராகுல் காந்தி அதற்கு முன் சரியானதுதானா என சரிபார்க்க வேண்டும். ராஜிவ் காந்தி (முன்னாள் பிரதமர்) மற்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மோசமான சாதனையை அவர் மறந்துவிடக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்குவங்க அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், அம்மாநில உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.