என் மலர்
இந்தியா

பெஸ்ட் மின்சார பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி- மாநகராட்சி தகவல்

- நிபுணர் குழு, மின்சார பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
- விக்ரோலி மற்றும் காட்கோபர் டெப்போக்களில் 90 புதிய பஸ்கள் இயக்கப்படும்.
மும்பை:
மும்பை குர்லா மேற்கில் எஸ்.ஜி. பார்வே பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி பெஸ்ட் மின்சார பஸ் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பஸ் டிரைவர் 3 நாட்கள் பயிற்சிக்கு பிறகு டிசம்பர் 1-ந்தேதி முதல் மின்சார பஸ்சை ஓட்டியதாக கூறப்படுகிறது. இது விபத்துக்கு காரணமாக அமைந்து இருக்கலாம் என தெரிகிறது. மேலும், இந்த விபத்துக்கு மனிதத்தவறும் காரணமாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்குப்பிறகு பெஸ்ட் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, மின்சார பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் மின்சார பஸ் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் பெஸ்ட் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டது. பெரும்பாலான மின்சார பஸ்கள் தானியங்கி பரிமாற்றத்தை கொண்டுள்ளன. விபத்துகளை தடுப்பதற்கும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பெஸ்ட் நிறுவனத்திற்கு முறையே 2100 மற்றும் 2400 பஸ்களை வழங்குவதற்கான 2 தனித்தனி ஒப்பந்தங்கள் போடப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விக்ரோலி மற்றும் காட்கோபர் டெப்போக்களில் 90 புதிய பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.