என் மலர்
இந்தியா
டிரம்ப் மிரட்டல்: பட்ஜெட்டில் அமெரிக்க பொருட்கள் இறக்குமதி வரியை குறைக்கும் மத்திய அரசு?
- இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கின்றன.
- அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகள் மீது அதிக வரி விதிக்கப்போவதாக டிரம்ப் சூளுரைத்துள்ளார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளார்.
இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி சுங்க வரி குறைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றத்து முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் அவர்களின் பொருட்களுக்கும் வரியை அமெரிக்கா உயர்த்தும் என பதவியேற்கும் முன்னரே பேசியிருந்தார்.
இதனை முன்வைத்து விவாதங்கள் நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று புளோரிடாவில் தனது கட்சியினரிடையே உரையாற்றிய டிரம்ப், பிரிக்ஸ் நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவவிடம் அதிக வரி வசூலிப்பவை என தெரிவித்தார்.
அமெரிக்கப் பொருளாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் இந்த நடைமுறைகளைத் தனது நிர்வாகம் இனி பொறுத்துக்கொள்ளாது என்று கூறினார்.
அமெரிக்கா தான் பிரதானம், அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகள் மீது அதிக வரி விதிக்கப்போவதாக டிரம்ப் சூளுரைத்துள்ளார். முன்னதாக நேற்று முன் தினம் மோடியுடன் டிரம்ப் தொலைப்பேசியில் உரையாடிய நிலையில் நேற்று இந்த கருத்தை பேசியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
வரி விதிப்புகளில் டிரம்பின் நிலைப்பாடு அமெரிக்க-இந்தியா வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில்தான் பட்ஜெட்டில் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிலாக தங்கத்தின் இறக்குமதியில் வரி உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேற நினைத்தால், டாலர் வர்த்தகத்தை குறைத்தால் 100% வரி விதிப்பை மேற்கொள்ளுவோம் என டிரம்ப் எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் மோடி அமெரிக்காவில் டிரம்பை சந்திக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.