என் மலர்
இந்தியா

இலாகாக்களை பெறுவதில் பாஜக தலைவர்களிடையே சண்டை: அதிஷி குற்றச்சாட்டு

- தற்போது பாஜக தலைவர்களிடையே அமைச்சரவையில் இடம் பிடிப்பது தொடர்பாக சண்டை நடைபெற்று வருகிறது.
- அதிலும் பொதுமக்கள் பணத்தை சுரண்டுவதற்கான துறையை பெறுவதற்கான சண்டை நடைபெற்று வருகிறது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.
பொதுமக்களின் நிதியை சுருண்டுவதற்கு வசதியான இலாகாக்களை பெறுவதில் பாஜக தலைவர்களிடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதனால் ஆட்சி அமைக்க காலதாமதமாகிறது என டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளர்.
இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-
தற்போது பாஜக தலைவர்களிடையே அமைச்சரவையில் இடம் பிடிப்பது தொடர்பாக சண்டை நடைபெற்று வருகிறது. அதிலும் பொதுமக்கள் பணத்தை சுரண்டுவதற்கான துறையை பெறுவதற்கான சண்டை நடைபெற்று வருகிறது.
டெல்லி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கான பழியை ஆம் ஆத்மி கட்சியின் மீது சுமத்துவதே அவர்களின் உத்தி.
அவர்கள் தங்கள் சொந்த தோல்விகளை மறைக்கவும், தங்கள் வாக்குறுதிகளை மீறுவதை நியாயப்படுத்தவும் இந்த சாக்குப்போக்கைப் பயன்படுத்துவார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக மோடி உத்தரவாதம் என்ற பெயரில் ஒரு துண்டு பிரசுரத்தை விநியோகித்தது. அதில் டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதத்திற்கு ரூ.2,500 என்று உறுதியளித்தது. இது முதல் அமைச்சரவை கூட்டத்தில் செயல்படுத்தப்படும் என்றும், முதல் தவணை மார்ச் 8-ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
இருப்பினும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று பாஜக வட்டாரங்கள் இப்போது தெரிவிக்கின்றன.
இவ்வாறு அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.