என் மலர்
இந்தியா
ஒடிசாவில் துணிகரம் - நோ பால் கொடுத்த அம்பயர் குத்திக் கொலை
- ஒடிசாவின் கட்டாக் நகரில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
- இதில் நோ பால் கொடுத்த அம்பயர் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கட்டாக்:
ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ளூரைச் சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்த முடிவானது.
இதில் பெர்ஹாம்பூர் மற்றும் சங்கர்பூர் பகுதியைச் சேர்ந்த இரு அணிகள் பங்கேற்றன. போட்டி நடுவராக லக்கி ராவத் (22), என்பவர் செயல்பட்டார்.
பெர்ஹாம்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அம்பயர் நோ பால் வழங்கினார். பொதுவாக நடுவர் வழங்கும் தீர்ப்பை வீரர்கள் ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் இப்போட்டியின்போது தவறான முடிவை வழங்கிவிட்டார் எனக்கூறி மோதல் தொடங்கியது.
நடுவரின் முடிவால் இரு அணியினரும் தகராறில் ஈடுபட்டனர். இந்த மோதல் முற்றியதில் பெர்ஹாம்பூர் அணியின் விளையாட்டு வீரரான ஜக்கா பேட்டால் லக்கியை தாக்கினார்.
மேலும் ஸ்முருதி ரஞ்சன் ராவத் என்ற மோனு என்பவர் ஆத்திரத்தில் மைதானத்தில் புகுந்து லக்கியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த லக்கி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய ஒருவரை கிராமவாசிகள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொரு நபரை பிடிப்பதற்கான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பயர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.