search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு-ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை: 26-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க வாய்ப்பு
    X

    ஜம்மு-ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை: 26-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க வாய்ப்பு

    • டெல்லி-ஸ்ரீநகர் இடையேயும் விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளன.
    • ரெயில் போக்குவரத்தை தங்குதடையில்லாமல் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில், இமயமலை பகுதியில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர ஏனைய பகுதிகளில் ரெயில் போக்குவரத்து வசதி முழுமையாக செய்யப்பட்டுள்ளது. மலைகள், பள்ளத்தாக்குகள் என சமநிலை இல்லாமல் இருந்தாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இப்போது மலைகளை குடைந்தும், பள்ளத்தாக்குகளில் பாலங்கள் அமைத்தும் சமநிலையை ஏற்படுத்தி ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜம்மு - ஸ்ரீநகர் - பாராமுல்லா இடையே 345 கி.மீ. தூரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்க ரூ.43 ஆயிரத்து 12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    அதில், உலகின் 8-வது அதிசயமான பிரமாண்ட செனாப் வளைவு இரும்பு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செனாப் பாலம் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் உயரமாகும்.

    அதாவது, கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலும், பள்ளத்தாக்கில் இருந்து 359 மீட்டர் உயரத்திலும் 1,315 மீட்டர் நீளத்துக்கு இந்த பாலம் அமைந்துள்ளது. இந்த செனாப் பாலத்துக்கு மட்டும் செலவிடப்பட்ட தொகை ரூ.1,486 கோடியாகும்.

    தற்போது ஜம்மு-ஸ்ரீநகர் இடையே சாலை மார்க்கம் 244.3 கி.மீ. நீளம் இருக்கிறது. இந்த பாதை இமயமலையில் வளைவு, நெளிவு, ஏற்ற, இறக்கத்துடன் உள்ளதால், இந்த பாதையில் வாகனங்களில் சென்று இலக்கை அடைய 5½ மணி நேரம் ஆகிறது. ஆனால், ரெயில் பாதை என்று வரும்போது 267 கி.மீ. நீளம் இருக்கிறது. மொத்தம் 27 ரெயில் நிலையங்கள் இடையில் உள்ளன.

    விரைவில் குளிர் பகுதியான ஜம்மு-ஸ்ரீநகர் இடையே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் 3 மணி நேரம் 10 நிமிடத்தில் இலக்கை அடையும்.

    ஜம்மு-காஷ்மீரில் மைனஸ் 6 டிகிரிக்கு மேல் குளிர் நிலவினால், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதுபோன்ற நேரத்தில்கூட, ரெயில் போக்குவரத்தை தங்குதடையில்லாமல் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    இதேபோல், டெல்லி-ஸ்ரீநகர் இடையேயும் விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளன. இந்த 2 வந்தே பாரத் ரெயில்களையும் வரும் 26-ந்தேதி அன்று குடியரசு தினத்தில் பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கிவைப்பார் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×