என் மலர்
இந்தியா

கெஜ்ரிவாலின் 'ஷீஷ் மஹால்' குறித்து விசாரிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு

- ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
- ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.
'முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது'என்று பாஜக குற்றம் சாட்டியது.
ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக கூறியது. அனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி ஆதாரம் கேட்டது. ஆனால் கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறியபோது அனைத்தும் மாயமானதாக பாஜக கூறியது.
பாஜகவின் இடைவிடாத ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் இல்லத்தை புதுப்பித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா அளித்த புகாரின் பேரில், விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய பொதுப்பணித் துறையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.