என் மலர்
இந்தியா
எங்களை மதிக்கலைன்னா இதுதான் நடக்கும் - மத்திய மந்திரியை அறையில் அடைத்த பா.ஜ.க.வினர்
- மேற்கு வங்காள பா.ஜ.க. தொண்டர்கள் மத்திய மந்திரியை அறையில் வைத்து பூட்டினர்.
- இதில் சம்பந்தப்பட்ட தொண்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. தெரிவித்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் பன்குரா நகரில் மாவட்ட அலுவலகத்திற்கு மத்திய கல்வி இணை மந்திரி மற்றும் எம்.பி.யான சுபாஸ் சர்க்கார் நேற்று வந்தார். அங்கு தொண்டர்களை அழைத்துக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
அப்போது, அங்கு திரண்ட பா.ஜ.க. தொண்டர்களில் சிலர் கும்பலாக சேர்ந்து மத்திய மந்திரியை கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து பூட்டினர். அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர் ஒருவர் கூறுகையில், கட்சி தொண்டர்களுக்கு சர்க்கார் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். கட்சியை காப்பாற்றவே நாங்கள் போராடி வருகிறோம். அவராலேயே, இந்த முறை பன்குரா நகராட்சியில் கட்சிக்கு எந்த சீட்டும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
மத்திய மந்திரியை அடைத்து வைத்தது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.