என் மலர்
இந்தியா
இந்தியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் இரட்டை வேடம் போடுகின்றன - ரஷிய தூதர் குற்றச்சாட்டு
- இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
- இந்த விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் இரட்டைவேடம் போடுவதாக ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ரஷியா, உக்ரைன் போரால் ரஷிய இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ளன. கடந்த சில மாதமாக ரஷியாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவருகிறது. இந்த கச்சா எண்ணெய், தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, ரஷிய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவின் செயலை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் செய்திநிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை விமர்சித்து வருகின்றன. இது அந்நாடுகளின் இரட்டை வேடத்தை, இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.
தங்களின் சொந்தக் குரலை இழந்து, அமெரிக்காவுக்கு ஏற்ப ஆடும் மேற்கத்திய நாடுகளின் செயலால் உலகளவில் எரிசக்தி விலை உயர்ந்திருக்கிறது. அதற்காக இந்தியா ஏன் விலை கொடுக்க வேண்டும்?
ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் தடையைத் தாண்டி இந்திய-ரஷியா வர்த்தகம் வெகுவாக வளர்ந்து வருகிறது. இரு நாடுகளும் இன்னும் பரஸ்பர வர்த்தகத்தை வளர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் சீரான நிலையை ரஷியா மதிக்கிறது என தெரிவித்தார்.