என் மலர்
இந்தியா

டெல்லியின் 4-வது பெண் முதல்வராகும் ரேகா குப்தா: கெஜ்ரிவால், அதிஷி சொல்வது என்ன?

- டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்கான பணிக்காக பாஜக-விற்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி எப்போதும் தயாராக இருக்கிறது- கெஜ்ரிவால்.
- மார்ச் 8-ந்தேதி டெல்லி பெண்களின் வங்கி கணக்கில் 2500 ரூபாய் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார்.
டெல்லியின் 4-வது பெண் முதல்வர் இவராவார். இதற்கு முன்னதாக சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்ஷித், அதிஷி ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர். தற்போது 4-வது பெண் முதல்வராக இன்று மதியம் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ரேகா குப்தா பதவி ஏற்பது குறித்து கூறியதாவது:-
டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவுக்கு வாழ்த்துகள். டெல்லி மக்களுக்கு அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்காக அனைத்து பணிகளிலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி கூறியதாவது:-
டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவிற்கு என்னுடைய வாழ்த்துகள். பாஜக என்னென்ன வாக்குறுதிகள் அளித்ததோ, அனைத்தையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்கான பணிக்காக பாஜக-விற்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி எப்போதும் தயாராக இருக்கிறது.
பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. மார்ச் 8-ந்தேதி அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. சொன்னபடி மார்ச் 8-ந்தேதி வங்கியில் பணம் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
அவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.