search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எல்லா பழியையும் நேரு மீது போடாமல் நிகழ்காலத்தை பற்றி எப்போ பேசுவீங்க?.. கன்னிப் பேச்சில் பிரியங்கா விளாசல்
    X

    எல்லா பழியையும் நேரு மீது போடாமல் நிகழ்காலத்தை பற்றி எப்போ பேசுவீங்க?.. கன்னிப் பேச்சில் பிரியங்கா விளாசல்

    • தனியார்மயமாக்கல் மூலம், இந்த அரசு இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயல்கிறது.
    • இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது பங்கு ஒருபோதும் மறைக்க முடியாதது.

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்றைய மக்களவை கூட்டத்தில் அரசியலைப்பு மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றிய நிலையில் அவரைத் தொடர்ந்து வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

    தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம் கண்ட பிரியங்கா வயநாடு இடைத்தேர்தலில் வென்று முதல் முறையாக மக்களவையில் ஆற்றும் கன்னி உரை இது.

    அதன்படி மக்களவையில் பிரியங்கா காந்தி தனது முதல் உரையில்,

    நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் கவசம், நீதி, ஒற்றுமை, பேச்சு சுதந்திரம் உரிமை ஆகியவற்றின் கவசம். ஆனால் 10 ஆண்டுகளில், ஆளும் தரப்பு இந்த கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது வருத்தமளிக்கிறது.

    அரசியல் சட்டம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை உறுதியளிக்கிறது. குறுக்கு வழியில் நுழைவது, தனியார்மயமாக்கல் மூலம், இந்த அரசு இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயல்கிறது.

    தேர்தல் முடிவு வேறு மாதிரி இருந்திருந்தால் அரசியல் சட்டத்தை மாற்றும் பணியை அவர்கள் தொடங்கியிருப்பார்கள். நாட்டின் அரசியலமைப்பை இந்த நாட்டு மக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்பதை இந்தத் தேர்தல்களில் அறிந்து கொண்டதால்தான் அவர்கள் அரசியல் சாசனத்தைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள் என்பதே உண்மை.

    கிட்டத்தட்ட தோல்வியடைந்த நிலையில், இந்த தேர்தல்களில் வெற்றி பெற்றதால்தான் அரசியலமைப்பை மாற்றுவது பற்றிய விவாதங்கள் இந்த நாட்டில் வேலை செய்யாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

    எவருடைய பெயரை [நேரு] நீங்கள் பேசத் தயங்குகிறீர்களோ, அவர் ஏற்படுத்திய HAL, BHEL, SAIL, GAIL, ONGC, NTPC, ரயில்வே, ஐஐடி, ஐஐஎம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை புத்தகங்களில் இருந்து துடைக்க முடியும், ஆனால் இந்த தேசத்தின் சுதந்திரத்தில், இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது பங்கு ஒருபோதும் மறைக்க முடியாதது.

    எல்லாப் பழியையும் நேரு மீது சொல்லும் நீங்கள் ஏன் நிகழ்காலத்தைப் பற்றி பேசவில்லை? விவசாயச் சட்டங்கள் அதிகாரம் படைத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. அரசு அதானிக்கு சாதகமாக உள்ளது.

    அரசியல் சட்டம் தங்களை பாதுகாக்கும் என்று மக்கள் நம்பினர், ஆனால் தற்போது அந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஒரு நபரைக் [அதானியை] காப்பாற்ற 1.4 பில்லியன்[ 140 கோடி] மக்கள் புறக்கணிக்கப்படுவதை நாடு கவனித்து வருகிறது.

    Next Story
    ×