என் மலர்
இந்தியா

அமெரிக்கா தந்த USAID நிதி எங்கே?.. 'தேர்தல்' சர்ச்சைக்கு நிதி அமைச்சகம் விளக்கம்!

- இந்திய அரசாங்கத்துடன் இணைந்து $750 மில்லியன் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது
- USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளது.
இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாகக் கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் USAID அமைப்பிடம் பெற்ற நிதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில், அமெரிக்க நிறுவனமான USAID, இந்திய அரசாங்கத்துடன் இணைந்து 750 மில்லியன் டாலர் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் எதுவும் தேர்தல்கள் அல்லது வாக்கு சதவீத அதிகரிப்புடன் தொடர்புடையவை அல்ல என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ரூ. 6,498 கோடி (750 மில்லியன் டாலர்) மதிப்பீட்டில் விவசாயம்-உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், குடிநீர்-சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை-சுகாதாரம், நிலையான காடுகள்-காலநிலை திட்டங்கள் மற்றும் புதுமை(innovation) திட்டங்களுக்காக USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தேர்தல் மற்றும் வாக்கு சதவீதத்துக்கு இந்தியா நிதி பெற்றதாக குறிப்பிட்ட டிரம்ப் உடைய கூற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.