என் மலர்
இந்தியா
கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்... கடுமையான விதிகளை ஏன் அமல்படுத்தவில்லை- மம்தாவுக்கு பாஜக கேள்வி
- why the West Bengal government hasn't done anything for implementing the stringent rules and regulations BJP
- பெண்கள் பாதுகாப்பிற்கான கடுமையான விதிகள் இருக்கும்போது அதை ஏன் அமல்படுத்தவில்லை- பாஜக
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணையில் நடத்தி வருகிறது. அதேவேளையில் பெண்களை இது போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாப்பாகவும், மீண்டும் இத்தகைய குற்றங்கள் நடைபெறாத வண்ணம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கவும் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார்.
மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் முதல் கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை எனக்கூறி 2-வது முறையாக நேற்று கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள். கேள்விக்கு பதில் அளியுங்கள் என மேற்கு வங்காள மாநில பாஜக துணைத் தலைவர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் "பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கடுமையான விதிகளை அமல்படுத்த மேற்கு வங்காள அரசு ஏதும் செய்யாதது குறித்து மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும். கடிதம் எழுதுவரை நிறுத்துங்கள். கேள்விக்கு பதில் அளியுங்கள். நீங்கள் தான் பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு 2-வது முறையாக எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இது போன்ற முக்கியமான பிரச்னைக்கு உங்களிடமிருந்து பதில் வரவில்லை. இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரிடமிருந்து ஆகஸ்ட் 25-ம் தேதி பதில் கிடைத்தது. ஆனால், எனது கடிதத்தில் எழுப்பப்பட்ட பிரச்சனையின் தீவிரத்தன்மை அதில் கவனிக்கப்படவில்லை.
மேலும், அந்த பதிலில் கவனிக்கப்படாத அதேசமயம் எங்கள் மாநிலம் ஏற்கனவே எடுத்த சில முயற்சிகளை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (FTSCs) தொடர்பாக, 10 பிரத்யேக போக்சோ (POCSO) நீதிமன்றங்கள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, மாநிலம் முழுவதும் 88 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 62 போக்சோ நீதிமன்றங்கள் முழு மாநில நிதியுதவியில் இயங்கி வருகின்றன. வழக்குகளைக் கண்காணித்தல் மற்றும் முடித்துவைப்பது ஆகியவை முற்றிலும் நீதிமன்றங்களின் வசம் இருக்கிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளை மட்டுமே விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் முதன்மை அதிகாரிகளாக நியமிக்க முடியும். ஆனால், வழக்குகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நிரந்தர நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் கவனித்திருக்கிறது. இதற்கு மத்திய அரசு அளவில் ஆய்வு மற்றும் அதன் பிறகான பொருத்தமான நடவடிக்கை தேவை. இதற்கு தங்களின் தலையீடு அவசியம். இவை தவிர, ஹெல்ப்லைன் எண் 112, 1098 ஆகியவை மாநிலத்தில் திருப்திகரமாகச் செயல்படுகின்றன.
கூடுதலாக, அவசரகால சூழ்நிலைகளில் ஹெல்ப்லைன் எண் 100 பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, விசாரணை அதிகாரிகளால் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்குகளைத் தீர்ப்பதற்கான கட்டாய ஏற்பாடுகளுடன், பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு முன்மாதிரியான கடுமையான தண்டனை மற்றும் கடுமையான மத்திய சட்டத்தைப் பரிசீலிக்குமாறு தங்களை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த விஷயம், தங்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.