என் மலர்
இந்தியா
ஜனநாயகத்தில் முதல்வர்தான் முன்னிலை: ஆனால்...! மேற்கு வங்காள கவர்னர் சொல்வது என்ன?
- ஜனநாயகத்தில், ஒரு மாநிலத்தின் முன்முகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிதான்
- ஒவ்வொருவருக்கும் லட்சுமணன் ரேகை எனப்படும் எல்லை உள்ளது. அதை தாண்டக்கூடாது
இந்தியாவில் பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களுக்கும், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் கவர்னர்களுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கும் முன்னாள் கவர்னர் ஜெக்தீப் தன்கர் இடையே கடும் மோதல் இருந்தது. பின்னர் ஒரு வழியாக ஜெக்தீப் தன்கர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு மாற்றலாகி சென்றார்.
தற்போது சி.வி. ஆனந்தா போஸ் மேற்கு வங்காள மாநில கவர்னராக இருந்து வருகிறார். இவருக்கும் மம்தாவுக்கும் இடையிலும் மோதல் போக்கு இருந்து வருகிறது.
ஆளுநருக்கு அதிகாரம் அதிகமா? முதல்வருக்கு அதிகமா? என்ற விவாதம் மேலோங்கி நிற்கும் நிலையில், பிடிஐ செய்தி நிறுவனம் சி.வி. ஆனந்தா போஸிடம் பேட்டி கண்டது.
அப்போது சி.வி. ஆனந்தா போஸ் கூறியதாவது:-
கவர்னரின் மதிப்பிற்குரிய அரசியல் சாசனத்தின்படி முதலமைச்சர், கவர்னரின் சகா. ஜனநாயகத்தில், ஒரு மாநிலத்தின் முன்முகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிதான். நியமனம் செய்யப்பட்ட கவர்னர் அல்ல.
ஒரு கவர்னராக, நான் மாநில அரசு என்ன செய்கிறதோ, அதற்கு ஒத்துழைப்பேன், ஆனால், என்ன செய்தாலும் அதற்கெல்லாம் ஒத்துழைக்க மாட்டேன். ஒவ்வொருவரும் அவர்களுடைய களத்தில் பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் லட்சுமணன் ரேகை என்படும் எல்லை உள்ளது. அதை தாண்டக்கூடாது. மேலும், முக்கியமானது. மற்றவர்களுக்காக லட்சுமணன் ரேகை தீட்டக்கூடாது. அதுதான் கூட்டாட்சி தத்துவம்'' என்றார்.
முன்னதாக, மம்தா பானர்ஜி அரசியலமைப்பு விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியலமைப்பு அல்லாத செயலுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.