என் மலர்
இந்தியா
மாறுவேடமிட்டு அமித் ஷாவை சந்தித்தேனா? நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார்- அஜித் பவார்
- நான் எங்கே செல்ல வேண்டுமென்றாலும் வெளிப்படையாக செல்வேன்.
- நான் மாறுவேடத்தில் சென்றதாக கூறப்படும் செய்தி நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வருகிறது.
முன்னதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தன.
பின்னர் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்த பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து பறித்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.
பின்னர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜக- ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கூட்டணியில் இணைந்தார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பறித்துக் கொண்டார்.
தற்போது பாஜக மூத்த தலைவரான அமித் ஷாவை அஜித் பவார் மாறுவேடமிட்டு டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி அமைப்பது குறித்து பேசினார் என்ற செய்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த செய்தி மீதான நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது:-
நான் மாஸ்க் அணிந்து தொப்பியுடன் விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ததாகவும், என்னுடைய பெயரை மாற்றி பயணம் செய்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
நான் ஜனநாயகத்தில் பணியாற்றி வருபவன். எதையும் மறைத்து அரசியல் செய்கின்ற பழக்கம் எனக்கு இல்லை. இருப்பினும், போலியான கதைகள் மற்றும் தவறான செய்திகள் மூலம் எதிரிகளால் அவதூறுக்கு ஆளாகிறோம்.
மாறுவேடத்தில் நான் டெல்லிக்கு சென்றதாக கூறப்படும் செய்தி தவறானது. நான் எங்கே செல்ல வேண்டுமென்றாலும் வெளிப்படையாக செல்வேன். யாரையும் பற்றி கவலைப்பட வேண்டிய தேவை எனக்கு இல்லை. நான் மாறுவேடத்தில் சென்றதாக கூறப்படும் செய்தி நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்.
அதேவேளையில் இந்த செய்தி தவறானது என கண்டுபிடிக்கப்பட்டால் எந்தவித ஆதாரம் அல்லது உண்மையில்லாமல் குற்றச்சாட்டு உருவாக்கினார்களோ?, அவர்கள் அரசியலில் இருந்து விலக வேண்டும்.
இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவது நான் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எல்லோரும் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள், எனவே, அத்தகைய சம்பவம் சாத்தியமற்றது. தற்போது நடப்பது அனைத்தும் தவறு. இந்த அறிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
தற்போது, மாநிலத்தில் எனக்கு எதிராக அவதூறு பரப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது. பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அஜித் பவார் தெரிவித்துள்ளார்.