என் மலர்
இந்தியா
டெல்லி பெண் கடத்தி கூட்டாக கற்பழிப்பு: சாக்கு மூட்டையில் கட்டி சாலையில் வீசிய கும்பல்
- நிர்பயா சம்பவத்தை போல மற்றொரு நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
- இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
புதுடெல்லி :
டெல்லியை சேர்ந்த நிர்பயா என்ற இளம்பெண் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழித்து, சித்ரவதை செய்யப்பட்டு பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 நாட்களுக்குப்பின் சிங்கப்பூரில் உயிரிழந்தார். நெஞ்சை உலுக்கிய இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதைப்போல மற்றொரு சம்பவம் தற்போது டெல்லி அருகே நடந்து உள்ளது. டெல்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 5 பேர் கும்பலால் சீரழிக்கப்பட்டு பலவித சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.
நந்த் நகரியை சேர்ந்த அந்த பெண்ணுக்கும், வேறு சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் அந்த பெண் தனது சகோதரரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த 17-ந்தேதி குருகிராம் சென்றுள்ளார். அது முடித்து திரும்பியவரை 5 பேர் கும்பல் தங்கள் காரில் கடத்தி சென்றுள்ளது.
டெல்லியின் எல்லைப்பகுதியான காசியாபாத்துக்கு கொண்டு சென்ற அந்த கும்பல், பின்னர் மாறி மாறி அவரை கொடூரமாக கற்பழித்து இருக்கிறது. அத்துடன் பலவிதமான சித்ரவதைகளையும் அந்த பெண்ணுக்கு அளித்து உள்ளனர்.
பின்னர் பெண்ணின் கை மற்றும் கால்களை கட்டி, ஒரு சாக்கு மூட்டையில் கட்டி நேற்று அதிகாலையில் சாலையோரம் வீசியுள்ளனர்.
வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்த அப்பகுதியினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு காசியாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறியுள்ள டாக்டர்கள், முக்கியமான உள்ளுறுப்புகள் எதுவும் சேதமடையவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே இந்த கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் குறித்து பெண் அளித்த தகவல்களின் பேரில் உடனடியாக போலீசார் விசாரணை நடத்தினர். அத்துடன் அவர்களை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இதன் பயனாக அந்த கும்பலை சேர்ந்த 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறின் பேரில் இந்த கொடூரத்தை அரங்கேற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிர்பயா சம்பவத்தை போல மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியிருப்பது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது.
இது தொடர்பாக காசியாபாத் போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முதல் தகவல் அறிக்கையின் நகல் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார்.
இந்த சம்பவம் பயங்கரமாகவும், மனதை தொந்தரவு செய்யும் வகையிலும் இருப்பதாக கூறியுள்ள அவர், இது நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்துவதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.