என் மலர்
இந்தியா

ஹோலி கொண்டாட்டம்.. அதிக ஒலியெழுப்பினால் கடும் நடவடிக்கை.. உ.பி. முதல்வர் எச்சரிக்கை

- கடுமையாக தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு.
- நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை.
மத வழிபாட்டு தலங்களில் பொருத்தப்படும் ஒலிபெருக்கிகளுக்கு நிரந்தரமாக ஒலி கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார். வட மாநிலங்களில் நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
அரசு விருந்தினர் மாளிகையில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹோலி கொண்டாட்டங்களின் போது அதிக ஒலியெழுப்பி டி.ஜே. நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை மிகக் கடுமையாக தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக வளாகங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கால்நடைகள் கடத்தப்படுவதை கண்காணிக்கவும், கடத்தல்காரர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் காவல் துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கால்நடை கடத்தலுக்கு மாநிலத்தில் முழுமையான தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக மாவட்ட வாரியாக மதிப்பாய்வுகளை நடத்த வேண்டும் என்றும் மண்டல ஏ.டி.ஜி. பியூஷ் மோர்டியாவுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஹோலி கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்களை தடுக்க கடுமையான விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார். ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் முதல் பத்து குற்றவாளிகளை அடையாளம் காணவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.