என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வெல்வது யார்? இறுதிப்போட்டியில் டெல்லி- மும்பை நாளை மோதல்
- டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- 2023-ம் ஆண்டு மும்பையிடமும், கடந்த ஆண்டு பெங்களூரு அணியிடமும் தோற்று கோப்பையை இழந்தது.
மும்பை:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டித் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் கடந்த 11-ந்தேதியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்தன.
இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 3-வது இடத்தை பிடித்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெளியேற்றுதல் சுற்று போட்டிக்குள் நுழைந்தன. கடைசி 2 இடங்களை பிடித்த பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று போட்டியில் குஜராத்தை 47 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இப்போட்டி மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டில் கோப்பையை வென்றது. 2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. மும்பை அணியில் ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் சிறப்பாக விளையாடி வருகிறார்.
மேலும் நாட்சிவெர், கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர், அமெலியா கெர், இஸ்மாயில், யாஸ்திகா பாட்டியா போன்ற வீராங்கனைகள் உள்ளனர். அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது.
டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டு மும்பையிடமும், கடந்த ஆண்டு பெங்களூரு அணியிடமும் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த 2 முறையும் கோப்பையை வெல்ல முடியாத சோகத்தை சந்தித்த டெல்லி இந்த முறை பட்டத்தை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.
மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணியில் ஷபாலி வர்மா, ஜோனா சென், சதர்லெண்ட், ரோட்ரிக்ஸ், மாரிசேன் காப், ஷிகா பாண்டே ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.
இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.