என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஹெட் விக்கெட்டை வீழ்த்த ஸ்கெட்ச் போட்டாச்சு- ஆகாஷ் தீப்

- நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (11, 89, 140, 152 மற்றும் 17 ரன்) சிறப்பாக விளையாடி வருகிறார்.
- டெஸ்டில் அவரை கட்டுப்படுத்த எந்த மாதிரி திட்டங்களை வகுத்துள்ளோம் என்பதை வெளிப்படுத்த முடியாது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று பேட்டிங் பயிற்சியின் போது இடது கால்முட்டியில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவருக்கு பிசியோ சிகிச்சை அளித்ததுடன், ஐஸ்கட்டி ஒத்தடம் போட்டார். அவரது காயத்தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு, வலை பயிற்சியில் பேட்டிங் செய்த போது பந்து கையில் தாக்கியது.
பின்னர் ஆகாஷ் தீப் நிருபர்களிடம் கூறுகையில், 'கிரிக்கெட் விளையாடும்போது இது போன்று அடிபடுவது சகஜம். நாங்கள் பயிற்சி மேற்கொண்ட ஆடுகளம் வெள்ளைநிற பந்துக்குரியது என்று நினைக்கிறேன். அதனால் நிறைய பந்துகள் தாழ்வாகவே வந்தன. இருப்பினும் பயிற்சியின் போது இவ்வாறு அடிபடுவது வாடிக்கை தான். காயம் பயப்படும் அளவுக்கு இல்லை. ரோகித் சர்மா காயம் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை' என்றார்.
மேலும் ஆகாஷ் தீப்பிடம் பிரிஸ்பேன் டெஸ்டில் (31 ரன் எடுத்தார்) பும்ராவுடன் இணைந்து பாலோ-ஆனை தவிர்த்து இந்திய அணியை காப்பாற்றியது குறித்து கேட்ட போது, 'நானும், பும்ராவும் பின்வரிசையில் ஆடக்கூடியவர்கள். இது போன்று 20-30 ரன்கள் எடுப்பது அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அணிக்காக எந்த வழியிலாவது எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது மட்டுமே மனதில் ஓடியது. பாலோ-ஆனை தவிர்க்க வேண்டும் என்பதை எதிர்நோக்கி விளையாடவில்லை. அன்றைய தினம் ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். கடவுளின் அருளால் எங்களால் பாலோ-ஆனை தவிர்க்க முடிந்தது. இது போன்ற சூழலில் நீங்கள் நன்றாக ஆடும் போது, அது ஒட்டுமொத்த அணிக்கும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும். அது தான் வீரர்களின் ஓய்வறையில் எதிரொலித்தது.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (11, 89, 140, 152 மற்றும் 17 ரன்) சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்த டெஸ்டில் அவரை கட்டுப்படுத்த எந்த மாதிரி திட்டங்களை வகுத்துள்ளோம் என்பதை வெளிப்படுத்த முடியாது. சொன்னால் அதற்கு ஏற்ப தயாராகி விடுவார். டிராவிஸ் ஹெட் 'ஷாட்பிட்ச்' பந்துகளில் தடுமாறக்கூடியவர். அவரை களத்தில் நிலைத்துநின்று ஆட விடக்கூடாது. அவருக்கு எதிராக குறிப்பிட்ட இடத்தில் பந்தை பிட்ச் செய்து வீசுவதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு வீசும் போது அவர் தவறிழைத்து விக்கெட்டை இழக்க வாய்ப்பு உருவாகும்' என்றார்.