search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    களத்தில் என்னோட ஆலோசகர் அஸ்வின்.. அவரை நிச்சயம் மிஸ் செய்வேன்.. ஜடேஜா உருக்கம்
    X

    களத்தில் என்னோட ஆலோசகர் அஸ்வின்.. அவரை நிச்சயம் மிஸ் செய்வேன்.. ஜடேஜா உருக்கம்

    • அஸ்வின் செய்தியாளர்களை சந்திப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் எனக்கு தெரியும்.
    • அவர் ஓய்வை அறிவிக்க போகிறேன் என்பது குறித்து சின்ன சிக்னல் கூட எனக்கு கொடுக்கவில்லை.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் அந்த தகவல் தனக்கு தெரியும் என்று நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அஸ்வினின் ஓய்வு குறித்து ரவீந்திர ஜடேஜா பேசுகையில், கடைசி நிமிடத்தில் தான் அஸ்வின் ஓய்வு பெறும் முடிவு தெரிய வந்தது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், அஸ்வின் செய்தியாளர்களை சந்திப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் எனக்கு தெரியும். அந்த செய்தியே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் அன்றைய நாள் முழுவதும் நானும், அவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

    அப்போது அவர் ஓய்வை அறிவிக்க போகிறேன் என்பது குறித்து சின்ன சிக்னல் கூட எனக்கு கொடுக்கவில்லை. ஆனால் அஸ்வினின் சிந்தனை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

    கிரிக்கெட் களத்தில் விளையாடும் போது அஸ்வின் தான் என்னுடைய ஆலோசகர் போல் இருப்பார். கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் களத்தில் இருவரும் மாற்றி மாற்றி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

    ஆட்டத்தின் சூழல் என்ன, பேட்ஸ்மேன் என்ன செய்ய முயற்சிக்கிறார், அவருக்கு எதிராக என்ன திட்டம் அமைக்கலாம் என்று ஆலோசித்திருக்கிறோம். இவை அனைத்தையும் நிச்சயம் மிஸ் செய்வேன். ஆனால் அஸ்வினின் இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டரை களமிறக்க வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது.

    கிரிக்கெட்டை பொறுத்தவரை யாரின் இடத்தையும் நிரப்ப முடியாது என்று கிடையாது. யார் சென்றாலும், அந்த இடத்திற்கு மற்றொருவர் கொண்டு வரப்படுவார். தற்போது அஸ்வின் ஓய்வு பெற்று சென்றுள்ளதால், இளம் வீரர்களுக்கு அவரின் இடத்தில் களமிறங்கி தங்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இருவரும் இணைந்து இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 587 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 12 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தியதற்கு இவர்கள் இருவரும் தான் முதன்மை காரணமாக அமைந்துள்ளனர்.

    Next Story
    ×