search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட்டில் முரளிதரனுடன் உலக சாதனை சமன் செய்தவர்.. அஸ்வினின் 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை
    X

    டெஸ்ட்டில் முரளிதரனுடன் உலக சாதனை சமன் செய்தவர்.. அஸ்வினின் 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை

    • 2010-ம் ஆண்டு ஒருநாள், டி20 போட்டியிலும் 2011-ம் ஆண்டில் டெஸ்ட்டிலும் அறிமுகமானார்.
    • இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் விளையாடி உள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 3 டெஸ்ட் போடிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    அவர் இந்திய அணிக்காக 14 ஆண்டுகளாக விளையாடி உள்ளார். 2010-ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள், டி20 போட்டியிலும் டெஸ்ட்டில் 2011-ம் ஆண்டிலும் அறிமுகமானார்.

    2010 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி வென்றதில் அஸ்வினின் பந்துவீச்சுக்கு முக்கியப் பங்கு வகித்தது. அந்தத் தொடரில் 13 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த சாதனையே அவர் இந்திய கிரிக்கெட் அணியிலும், சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட முக்கிய பங்காக அமைந்தது.

    இவர் 2011-ம் ஆண்டு இந்திய ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். மேலும் 2016-ம் ஆண்டு சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பிசிசிஐ விருதை வென்றவர்.

    2013-ம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி பந்தில் இங்கிலாந்து வெற்றி பெற 6 ரன்கள் தேவை. கடைசி பந்தை அஸ்வின் ஒரு ரன் கூட கொடுக்காமல் வீசி அணியை வெற்றி பெற வைப்பார். அந்த போட்டியில் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.

    பந்து வீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் கபில் தேவ், மனோஜ் பிரபாகர் வரிசையில் இந்தியாவின் தலைசிறந்த பவுலிங் ஆல்ரவுண்டராகத் அஸ்வின் திகழ்ந்தார்.

    2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் மறக்க முடியாத ஒரு போட்டியாகும். அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். இந்த போட்டியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த தொடரே அவரின் கடைசி டி20 போட்டி ஆகும்.

    2022-ம் ஆண்டுக்கு பிறகு டி20 இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2023-ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வந்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக அளவில் அதிவேகமாக 250, 300, 350 விக்கெட்களைக் குவித்தவர் அஸ்வின். இந்தியர்களில் 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500 விக்கெட்களை அதிவேகமாகக் குவித்தவரும் அவரே. 37 முறை 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள், 14 அரை சதங்களை அடித்துள்ளார். நான்கு போட்டிகளில், சதமும் அடித்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். வேறெந்த இந்தியரும் இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை.

    டெஸ்ட் போட்டிகளில் 11 முறை தொடர்நாயகன் விருதை அஸ்வின் வென்றிருக்கிறார். இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனுடன் இந்த உலக சாதனையை அவர் பகிர்ந்துள்ளார்.

    Next Story
    ×