search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம்.. உலகின் முதல் வீரர்.. பல சாதனைகளை படைத்த ரச்சின் ரவீந்திரா
    X

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம்.. உலகின் முதல் வீரர்.. பல சாதனைகளை படைத்த ரச்சின் ரவீந்திரா

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசினார்.
    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டி லாகூரில் நடைபெற்றது. வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா மற்றும் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவிந்திரா சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.

    நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரச்சின் ரவீந்திர விளாசிய 2-வது சதம் இதுவாகும். இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் இரண்டு சதங்களை விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை படைத்தார். இதற்கு முன்பு வங்கதேச அணிக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்ற லீக் போட்டியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது 25 வயதான ரச்சின் ரவீந்திரா தனது ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 5 சதங்கள் அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த அனைத்து சதங்களையும் அவர் ஐசிசி தொடர்களில் மட்டுமே அடித்துள்ளார். இதன்மூலம் ஐசிசி தொடர்களில் தனது அனைத்து ஒருநாள் சதங்களையும் அடித்த உலகின் முதல் வீரர் எனும் தனித்துவ சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.

    அதுமட்டுமின்றி, ஐசிசி போட்டியில் அதிவேகமாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐசிசி ஒருநாள் தொடர் வரலாற்றில் 25 வயதிற்குள் அதிக 50+பிளஸ் ஸ்கோரை அடித்ததன் அடிப்படையில் ரச்சின் ரவீந்திரா 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் தனது 13-வது இன்னிங்ஸில் தனது 7-வது 50+ பிளஸ் ஸ்கோரை அடித்தார்.

    இதன்மூலம் இந்தப் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் (17 இன்னிங்ஸில் 6 முறை), இலங்கையின் உபுல் தரங்கா (17 இன்னிங்ஸில் 6 முறை) ஆகியோரை ரச்சின் பின்னுக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×