என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபி: விற்று தீர்ந்த இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள்
- டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
- இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே.
துபாய்:
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. இதில் பரம எதிரிகள் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டமும் (பிப்.23) அடங்கும்.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று மாலை தொடங்கியது. குறைந்த விலை ரூ.2,900ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது.
இதில் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் வாங்கத் தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே. ஒரு மணி நேரத்திற்குள் அந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. இதே போல் துபாயில் நடக்கும் முதலாவது அரைஇறுதிக்கான டிக்கெட்டுகளும் விற்று விட்டன. அரைஇறுதி முடிந்த பிறகே இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும்.