என் மலர்
கிரிக்கெட் (Cricket)
தொடர் தோல்வியில் இந்திய அணி.. நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் கவுதம் கம்பீர்
- நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது.
- கவுதம் கம்பீர் மும்பையில் நாளை காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி தொடர்ந்து தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.
சொந்த மண்ணில் ஏற்பட்ட இந்த படுதோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்திடம் முழுமையாக தோற்றதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணதில் இந்திய அணி 5 டெஸ்டில் 4-ல் வெல்ல வேண்டும். அப்படி நிகழாவிட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக முன்னேற இயலாது. இதனால் ஆஸ்திரேலிய தொடர் கம்பீரின் தலை விதியை நிர்ணயம் செய்யும் என்று சொல்லப்படுகிறது.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் படுதோல்விக்கு பிறகு பிசிசிஐ தலைமையில் நீண்ட நேரம் ரிவ்யூ மீட்டிங் நடந்தது. இந்த மீட்டிங்கில் கம்பீர் மற்றும் ரோகித்தை தேர்வுக்குழு தலைவர்கள் கடுமையாக விமர்சித்ததாக சொல்லப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசாத இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் நாளை காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விரைவில் தொடங்க இருப்பதால் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.