என் மலர்
கிரிக்கெட் (Cricket)
யு19 மகளிர் ஆசிய கோப்பை- வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
- இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய மகளிர் அண்டர் 19 கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக மகளிர் யு19 ஆசிய கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் கோங்கடி திரிஷா அபாரமாக ஆடி 52 ரன்களை விளாசினார். இவர் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இடையில் கேப்டன் நிகி பிரசாத், மிதிலா வினோத் மற்றும் ஆயுஷி சுக்ளா மட்டும் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். இவர்கள் முறையே 12, 17 மற்றும் 10 ரன்களை அடித்து அவுட் ஆகினர். வங்கதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபர்ஜானா எஸ்மின் 4 விக்கெட்டுகளையும், நிஷிதா 2 விக்கெட்டுகளையும், ஹபிபா இஸ்லாம் 1 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய வங்கதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகளில் ஒருவரான மொசாமத் எவா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய ஃபஹோமிதா சோயா 18 ரன்களையும், அடுத்து வந்த சௌமியா அக்தெர் 8 ரன்களிலும் அவுட் ஆகினர்.
அடுத்து வந்தவர்களில் ஜூரியா ஃபெர்டோஸ் மட்டும் 22 ரன்களை அடிக்க மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் வங்கதேசம் அணி 18.3 ஓவர்களில் வெறும் 76 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆயுஷி சுக்ளா 3 விக்கெட்டுகளையும், பருனிகா சிசோடியா மற்றும் சோனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோஷிதா 1 விக்கெட் வீழ்த்தினர்.