என் மலர்
கிரிக்கெட் (Cricket)
4வது டெஸ்ட்: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்.. தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா
- நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
- ஆஸ்திரேலியா அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை துவங்கிய ஐந்தாம் நாளில் ஆஸ்திரேலியா அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இLன் மூலம் அந்த அணி இந்தியாவுக்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பேட்டிங்கில் ஆஸ்திரேலியா சார்பில் மார்னஸ் லபுஷேன் 70 ரன்களையும், பேட் கம்மின்ஸ் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நேதன் லயன் 41 ரன்களை அடித்தார். இவருடன் ஆடிய ஸ்காட் போலண்ட் 15 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா ஐந்து விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து இந்திய அணி 340 ரன்கள் எனும் இலக்கை துரத்தி ஆடி வருகிறது.
இந்த தொடரின் மற்ற போட்டிகளை போன்றே, இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்று 40 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கே.எல். ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடினார். எனினும், இந்த இன்னிங்ஸிலும் ஆஃப் ஸ்டம்ப்-ஐ விட்டு வெளியே சென்ற பந்தை அடிக்க முயன்று விராட் கோலி அவுட் ஆகி வெளியேறினார். இந்த தொடர் முழுக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இதே போன்ற பந்துவீசி விராட் கோலியை அவுட் ஆக்கி வந்துள்ளனர்.
ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி என அடுத்தடுத்து வந்தவர்கள் அவுட் ஆக இந்திய அணி 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. உணவு இடைவெளிக்குப் பிறகு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணிக்கு அடுத்த விக்கெட் இழக்கக்கூடாது என நிதானமாக ஆடி வருகின்றனர்.
துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி தோல்வியை தவிர்க்கவும், போட்டியை டிரா செய்யும் முனைப்பிலும் விளையாடி வருகிறது.