என் மலர்
ஐ.பி.எல்.

விராட் கோலியும், ஆர்சிபி-யின் சாம்பியன் கனவும்: ஏபி டி வில்லியர்ஸ் சொல்வது என்ன?

- விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட்டை பார்ப்பது அபத்தமானது.
- அணிக்கு அவரிடம் இருந்து என்ன தேவையோ? அதை சரியாக செய்து வருகிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தியாவின் தலைசிறந்த வீரரான விராட் கோலி ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து அந்த அணிக்கு அற்புதமான பங்களிப்பை கொடுத்து வருகிறார். கேப்டனாக அந்த அணிக்காக 140 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 252 போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவராக உள்ளார். அவரது ஸ்கோரில் 8 சதம், 55 அரைசதங்கள் அடங்கும்.
என்றாலும் ஆர்சிபி அணிக்காக அவரால் சாம்பியன்ஸ் கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று முறை 2-வது இடம் பிடித்தது. இந்த நிலையில்தான் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றால், அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த முடிவாக இருக்கும் என ஏடி பி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-
விராட் கோலி அவருடைய வசதியான இடத்தில் இருந்து வெளியே வந்து புதிய ஷாட்களை முயற்சி செய்து கொண்டிருப்பது, அவருடைய ஆட்டத்தில் மாறுபட்ட அம்சங்களை வெளிப்படுத்துவதை பார்க்க சிறப்பானதாக உள்ளது. இதை செய்வதற்கான திறன் அவரிடம் ஏற்கனவே உள்ளது.
ஆர்சிபி அணியோடு சாம்பியன் பட்டம் வெல்வது, ஏற்கனவே அவருடைய அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு சரியான முடிவாக (perfect finishing touch) இருக்கும்.
விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட்டை பார்ப்பது அபத்தமானது. அணிக்கு அவரிடம் இருந்து என்ன தேவையோ? அதை சரியாக செய்து வருகிறார். இது அனைத்தும் சூழ்நிலையை பொறுத்தது. மறுமுனையில் வேறு ஒருவர் அவருக்கு நம்பிக்கை கொடுக்கும்போது, அதிக சுதந்திரத்துடன் பரிசோதனை மேற்கொண்டு விளையாடுவதை பார்க்கலாம். அவ்வாறு இல்லாதபோது அவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். தேவை என வரும் நிலைத்து நின்று விளையாடுவார்.
இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.