என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒரே மைதானத்தில் ஆடுவது சாதகம்.. அப்படி என்ன சாதகமான அம்சத்தை பார்த்தீர்கள்.. பயிற்சியாளர் கம்பீர்

- துபாய் மைதானம் எங்களுக்கே அதிக அனுகூலம் என விவாதிக்கப்படுகிறது.
- ஒரு நாள் கூட நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்தது கிடையாது.
துபாய்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்திய அணி ஒரே மைதானத்தில் ஆடுவது கூடுதல் சாதகமாக இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். துபாய் ஆடுகளத்தன்மையை அறிந்து தான் இந்திய அணிக்கு 5 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்களா? என்ற கேள்விக்கு கம்பீர் கூறுகையில்,
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எங்களுக்கும், மற்ற அணிகளுக்கும் இது பொதுவான மைதானம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது இது எங்களுக்குரிய உள்ளூர் மைதானம் அல்ல. கடைசியாக இங்கு எப்போது விளையாடினோம் என்பது கூட ஞாபகம் இல்லை.
பாகிஸ்தானில் மட்டுமல்ல இந்திய துணை கண்டத்தில் எங்கு விளையாடினாலும் அணியில் இரண்டு முழுமையான சுழற்பந்து வீச்சாளர்களைத் தான் தேர்வு செய்து இருப்போம். மற்ற 3 பேரும் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்கள். நாங்கள் விளையாடிய முதல் இரு ஆட்டங்களை பார்த்தால் ஒரு பிரதான சுழற்பந்து வீச்சாளருடன் தான் களம் கண்டோம். கடைசி லீக்கிலும், அரைஇறுதியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் (மற்ற இருவர் சுழல் ஆல்-ரவுண்டர்) இடம் பெற்றனர்.
துபாய் மைதானம் எங்களுக்கே அதிக அனுகூலம் என விவாதிக்கப்படுகிறது. அப்படி என்ன சாதகமான அம்சத்தை பார்த்தீர்கள். ஒரு நாள் கூட நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்தது கிடையாது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐ.சி.சி. அகாடமியில் பயிற்சி மேற்கொள்கிறோம். இவ்விரு இடங்களுக்கு இடையே உள்ள சீதோஷ்ண நிலை முற்றிலும் வித்தியாசமானது. மேலும் பயிற்சி ஆடுகளத்துக்கும், துபாய் ஆடுகளத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எனவே மற்றவர்கள் சொல்வது போல் துபாயில் ஆடுவதால் எந்த விதமான சாதகமும் இல்லை.
விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. 140 கோடி இந்தியர்களுக்கும், இந்திய அணிக்கும் நேர்மையாக இருக்க வேண்டியது எனது பணி. அதைத் தான் நான் செய்கிறேன். மற்றவர்கள் என்ன பேசினாலும் அது குறித்து கவலைப்படமாட்டேன்.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும். நாங்கள் எல்லா வகையிலும் அற்புதமான ஒரு ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. அணியின் செயல்பாட்டில் ஒரு போதும் திருப்தி அடைய மாட்டேன். இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கிறது. 9-ந்தேதி அன்று நேர்த்தியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறோம்' என்றார்.