search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அடுத்த 6 மாதங்களுக்கு தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை: அதிரடியான மாற்றம் தேவை- வாசிம் அக்ரம்
    X

    அடுத்த 6 மாதங்களுக்கு தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை: அதிரடியான மாற்றம் தேவை- வாசிம் அக்ரம்

    • பாகிஸ்தான் அணியில் கடுமையான நடவடிக்கைகள் தேவை.
    • 5 முதல் 6 வீரர்களை மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் அதை தயவு செய்து செய்யுங்கள்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 60 ரன் வித்தியாசத்தில் தோற்றது. நேற்று முன்தினம் துபாயில் நடந்த 2-வது ஆட்டத்தில் அந்த அணி இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வங்காளதேசத்தை தோற்கடித்தது.

    இதன் மூலம் பாகிஸ்தான் அணி வெளியேறியது. வங்காளதேசமும் வெளியேற்றப்பட்டது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வெளியேற்றப்பட்டதால் பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட் டியில் தோற்றதால் பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கடுமையாக சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டிகளில் வேகமான ஆட்டம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் பழங்கால கிரிக்கெட்டையே இன்னும் ஆடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பாகிஸ்தான் அணியில் கடுமையான நடவடிக்கைகள் தேவை. அணியில் அதிரடியான மாற்றங்களை செய்ய வேண்டும்.

    பயமில்லாத இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வாருங்கள். 5 முதல் 6 வீரர்களை மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் அதை தயவு செய்து செய்யுங்கள்.

    அடுத்த 6 மாதங்களுக்கு தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை. இப்போது இருந்தே 2026-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பைக்கு புதிய அணியை உருவாக்க தொடங்குங்கள்.

    பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது. ஓமன், அமெரிக்கா அணிகளை விட எங்களது பந்து வீச்சு சராசரி மோசமாக இருந்தது.

    கேப்டன், தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர்களை அழைத்து அவர்கள் என்ன மாதிரியான தேர்வுகளை செய்கிறார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் தயவு செய்து கேட்க வேண்டும்.

    தற்போதுள்ள பாகிஸ்தான் அணி சரியானதாக இல்லை என்று நான் பல வாரமாக சொல்லி இருந்தேன். ஆனால் இது சிறந்த அணி தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சொன்னார்.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு ஒருநாள் முன்பு 1 மணி நேரம் கூட்டம் நடத்தினார்கள். ஆனால் அதே அணியை தான் கொண்டு வந்தார்கள். கேப்டன் ரிஸ்வானும் இதற்கு காரணம். அவரது செயல்பாடு சரியில்லை.

    ரிஸ்வானுக்கு எந்த மாதிரியான மேட்ச் வின்னர்கள் (ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்கள்) தேவை என்றே தெரியவில்லை. இது தற்போது மிகுந்த சங்கடமாக இருக்கிறது. மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் வீரர்களின் ஆட்டத்தை பார்த்து அதிருப்தி அடைந்தது அவர்கள் முகத்தில் தெரிந்தது. பாகிஸ்தான் பந்து வீசும்போது 15 ஓவர்களிலேயே அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.

    இவ்வாறு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

    Next Story
    ×