என் மலர்
கிரிக்கெட் (Cricket)
பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை- ஆலன் பார்டர் பாராட்டு
- என்னால் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மால்கம் மார்ஷலுடன் ஒப்பிட முடியாது.
- ஏனென்றால் நான் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை.
புதுடெல்லி:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா 18 விக்கெட் வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறார். 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் பும்ரா 6 விக்கெட் கைப்பற்றினார். கபில்தேவுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் 50 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த நிலையில் பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
என்னால் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மால்கம் மார்ஷலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் நான் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை. ஆனாலும், பும்ரா மிகவும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். அவர் எப்போதாவதுதான் விக்கெட் எடுக்காமல் இருப்பார். அவர் மிகவும் வித்தியாசமானவர்.
விக்கெட் வீழ்த்தும் எல்லா நேரத்திலும் அவர் சிரிக்கிறார். அவரால் ஒரு பேட்ஸ்மேனை தொடர்ச்சியாக 3 முறை அவுட்டாக்கி விட்டு அனைத்து முறையும் சிரிக்க முடியும். அவரைப் போல் யாரையும் நான் பார்த்ததில்லை. இவ்வாறு ஆலன் பார்டர் கூறியுள்ளார்.
ஆசியாவுக்கு வெளியே அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வெளிநாட்டவர் சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் 3 முறையும், தென் ஆப்பிரிக்காவில் 3 முறையும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்தில் தலா 2 முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.