என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐ.சி.யூ.வில் பாகிஸ்தான் கிரிக்கெட்: அப்ரிடி தாக்கு

- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.
- பாகிஸ்தானின் மோசமான தோல்விக்கு பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கராச்சி:
சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ஆனால் தொடரை நடத்திய பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி முதல் அணியாக தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடம் பிடித்தது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் இந்த மோசமான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார்.
நான் சில நாட்களுக்கு முன் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரை சந்தித்தேன். மைதானத்தை மேம்படுத்த அவர் செய்த முன்முயற்சிகள் அனைத்தும் நன்றாகவே இருந்தது. அவர் மேலும் கடாஃபி மைதானத்தை மெருகேற்ற விரும்புகிறார். ஆனால் அவர் என்னிடம் கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என கூறினார்.
உங்களுக்கு கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என்றால், கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் தொடங்கி இயக்குநர்கள் வரை நாம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை சரிசெய்ய முடியும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாவலர்கள் சரியாக இருந்தால் தான் அணியும் முன்னேற்றம் அடையும்.
நாம் எப்போதும் தயாரிப்புகளைப் பற்றிப் பேசுகிறோம், ஒரு நிகழ்வு வந்து தோல்வியடையும் போது அறுவை சிகிச்சை பற்றிப் பேசுகிறோம். உண்மை என்னவென்றால் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யூவில் உள்ளது என தெரிவித்தார்.