என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபியில் படுதோல்வி: இடைக்கால பயிற்சியாளரை நீக்க பாகிஸ்தான் முடிவு

- கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி பதவி விலகியதால் ஆகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் மோசமாக விளையாடியதால் இவரை விடுவிக்க பிசிபி முடிவு செய்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால், இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது.
அதன்படி கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மற்றும் துபாயில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. "ஏ" பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளன.
போட்டியை நடத்தும் பாகிஸ்தான் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 240 ரன் மட்டுமே அடித்தது. பின்னர் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ளது. இன்றைய போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறிவிடும். பாகிஸ்தானில் தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.
முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளரை என ஒட்டுமொத்தமாக அனைவரையும் பதவியில் இருந்து விடுவிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் பாகிஸ்தான் ஒயிட் பால் அணிகளுக்கு தென்ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ஆஸ்திரேலியாவின் கில்லெஸ்பி ரெட் பால் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால் அகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அணி மார்ச் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின்போது புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை. இதனால் முன்னாள் வீரர்களில் ஒருவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளது.