என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி: 3-ம் நாள் முடிவில் கேரளா 342 ரன்களில் ஆல் அவுட்

- கேரள அணி தரப்பில் சச்சின் பேபி 98 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 37 ரன்களுடன் விதர்பா அணி முன்னிலையில் உள்ளது.
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேரளா அணி தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்சைத் தொடர்ந்த கேரளா அணியில் ரோஹன் குன்னுமால் ரன்கள் ஏதுமின்றியும், அக்ஷய் சந்த்ரன் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஹ்மத் இம்ரானும் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் அந்த அணி 2-நாள் ஆட்டநேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆதித்யா சர்வதே 66 ரன்களுடனும், கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆதித்யா சர்வதே 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய சல்மான் நிசார் 21 ரன்களையும், முகமது அசாருதீன் 34 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் சச்சின் பேபி 10 பவுண்டரிகளுடன் 98 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜலஜ் சக்சேனா 26 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் கேரளா அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களில் ஆல் அவுட்டானது.
விதர்பா அணி தரப்பில் தர்ஷன் நல்கண்டே, ஹர்ஷ் தூபே, பார்த் ரேகாடே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 37 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி நாளை 4-ம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.