search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரஞ்சி டிராபி: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் சொதப்பல்- மும்பையை சாய்த்தது ஜம்மு-காஷ்மீர்
    X

    ரஞ்சி டிராபி: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் சொதப்பல்- மும்பையை சாய்த்தது ஜம்மு-காஷ்மீர்

    • ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 3 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 28 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் 4 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 26 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை- ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. நடப்பு சாம்பியன் அணியான மும்பையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.

    இதனால் மும்பை அணி ஜம்மு-காஷ்மீரை எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரன்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்ஸ்வால் (4), ரோகித் சர்மா (3), ரகானே (12), ஷ்ரேயாஸ் அய்யர் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஷர்துல் தாகூர் தாக்குப்பிடித்து 51 ரன்கள் அடிக்க 120 ரன்னில் சுருண்டது.

    ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் உமர் நசீர், யுத்விர் சிங் தலா 4 விக்கெட் வீழ்த்தி மும்பையை சுருட்ட முக்கிய காரணமாக இருந்தனர். பின்னர் ஜம்மு-காஷ்மீர் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷுபம் கஜுரியா 53 ரன்களும், அபித் முஷ்டாக் 44 ரன்களும் அடிக்க 206 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 26 ரன்னிலும், ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து சொதப்பினர். ரகானே 16 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 17 ரன்னிலும் ஆட்டமிழக்க 2-வது இன்னிங்சிலும் மும்பை அணி தடுமாறியது. ஆனால் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர் 2-வது இன்னிங்சில் 119 ரன்கள் விளாசினார். அவருக்கு துணையாக தனுஷ் கோட்டியான் 62 ரன்கள் சேர்க்க மும்பை 290 ரன்கள் அடித்தது.

    இதனால் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க வீரரான ஷுபம் கஜுரியா 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் அடித்தார். அபித் முஷ்டாக் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நடப்பு சாம்பியனான மும்பை அணியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாடியும் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளது.

    Next Story
    ×