என் மலர்
கிரிக்கெட் (Cricket)
மோசமான பேட்டிங்கால் நெருக்கடி: கோலிக்கு சிறிது ஓய்வு தேவை- ரிக்கி பாண்டிங் அறிவுரை
- விராட் கோலி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அதிகமாக முயற்சிக்கிறார்.
- உண்மையில் அதுவே அவருடைய பேட்டிங்கை கடினமாக்குகிறது.
புதுடெல்லி:
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி மோசமான பேட்டிங்கால் நெருக்கடியில் இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது பேட்டிங் மோசமாக இருந்தது. 3 டெஸ்டில் 93 ரன்களே எடுத்தார். சராசரி 15.50 ஆகும்.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரிலும் அவது மோசமான பேட்டிங் நீடித்தது. பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் சதம் அடித்த அவரால் அதன்பிறகு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 5 டெஸ்டில் 9 இன்னிங்சில் மொத்தம் 190 ரன்களே எடுத்தார். சராசரி 23.75 ஆகும். இதனால் விமர்சனத்துக்கு ஆளான அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.
இந்த நிலையில் விராட் கோலிக்கு சிறிது ஓய்வு தேவை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விராட் கோலி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அதிகமாக முயற்சிக்கிறார். உண்மையில் அதுவே அவருடைய பேட்டிங்கை கடினமாக்குகிறது. சில நேரங்களில் கடினமாக முயற்சிக்கும் போது குறைவான வெற்றிகள் மட்டுமே கிடைக்கும். எனவே ஒரு இடைவெளி மட்டுமே உதவி செய்யும்.
கடந்த காலங்களில் மனதளவில் தடுமாறிய போது அவர் கொஞ்சம் இடைவெளி எடுத்து ஒதுங்கி இருந்தார். பின்னர் கிரிக்கெட்டின் மீது அன்புடன் மீண்டும் சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நேரத்தில் அவரிடம் கிரிக்கெட்டின் மீது உண்மையான அன்பு இருப்பது போல் தெரியவில்லை. ஏனெனில் அவர் மகிழ்ச்சியுடன் இருக்க அதிகமாக முயற்சிக்கிறார். எனவே டெஸ்டில் தொடர்ந்து விளையாட விரும்பினால் விராட் கோலி கொஞ்சம் இடைவெளி எடுத்து மீண்டும் முழுமையான அன்புடன் வருவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
இந்த சிறிய ஓய்வு மூலம் அவரால் இழந்த ஆட்டத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும். மனதை அமைதிபடுத்தி ரன்களை குவிக்க இது உதவியாக இருக்கும்.
இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.
36 வயதான விராட்கோலி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து அவர் 27,324 ரன்களை (543 மேட்ச்) எடுத்து 4-வது இடத்தில் உள்ளார். 81 சதமும், 146 அரை சதமும் இதில் அடங்கும்.
டெஸ்டில் 9,230 ரன்னும், ஒருநாள் போட்டியில் 13,906 ரன்னும் எடுத்துள்ளார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.