என் மலர்
கிரிக்கெட் (Cricket)

லாரெஸ் சிறந்த 'கம்பேக்' வீரருக்கான விருது பட்டியலில் இடம் பிடித்த ரிஷப் பண்ட்

- ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு லாரெஸ் உலக விளையாட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
- சிறந்த ‘கம்பேக்’ வீரருக்கான விருது பிரிவில் 6 பேரில் ஒருவராக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.
மாட்ரிட்:
ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு லாரெஸ் உலக விளையாட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த வீரருக்கான விருது பிரிவில் டென்னிஸ் வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), உலக போல்வால்ட் சாதனை வீரர் மோன்டோ டுப்பிளான்டிஸ் (சுவீடன்), நீச்சல் வீரர் லியோன் மார்சந்த் (பிரான்ஸ்), சைக்கிளிங் வீரர் தடேஜ் போகாகர் (சுலோவேனியா), பார்முலா1 கார்பந்தய சாம்பியன் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்), கால்பந்து வீராங்கனை போன்மதி (ஸ்பெயின்), ஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை மங்கை சிமோன் பைல்ஸ் (அமெரிக்கா) உள்பட 6 பேர் அங்கம் வகிக்கிறார்கள்.
இதே போல் காயம், நோய் தாக்கம், மனதளவில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் போராடி மீண்டெழுந்து மறுவேசம் செய்து சாதிக்கும் சிறந்த 'கம்பேக்' வீரருக்கான விருது பிரிவில் 6 பேரில் ஒருவராக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய ரிஷப் பண்டுக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டு ஓராண்டு முழுவதும் ஓய்வில் இருந்தார். 629 நாட்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியதோடு, வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்தார். அதனால் அவரது பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விருது விழா ஏப்ரல் 21-ந்தேதி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடக்கிறது. அன்றைய தினம் யார்-யாருக்கு விருது கிடைக்கும் என்பது தெரிய வரும்.