என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வீரர்களை விமர்சனம் செய்த விவகாரம்: கவாஸ்கர் மீது பி.சி.சி.ஐ.யிடம் ரோகித் சர்மா புகார்?

- ரிஷப் பண்டை, முட்டாள் என மூன்று முறை நேரலையில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
- விமர்சனம் வரம்பு மீறி செல்வதால் அது வீரர்களுக்கான நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர். இவர் கிரிக்கெட்டின் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். அண்மை காலமாக கவாஸ்கர் விமர்சனம் செய்யும் போது கடும் கோபத்தை வெளிப்படுத்துகிறார். அண்மையில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட கவாஸ்கர் ரிஷப் பண்டை, முட்டாள் என மூன்று முறை நேரலையில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆனால் கவாஸ்கர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்பதால் அதை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் விமர்சனம் வரம்பு மீறி செல்வதால் அது வீரர்களுக்கான நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்தது.
மேலும் ரோகித் சர்மாவின் ஆட்டம் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். அதற்கும் மேலாக ரோகித்தை ஓய்வு பெறுமாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்தத் தொடரின் போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர் தொடர்ந்து இந்திய அணி மீதும் தன் மீதும் முறையற்ற விமர்சனத்தை வைத்ததாகவும் இது எங்களுடைய மனதை பாதிக்க வைத்திருக்கிறது என்றும் கேப்டன் ரோகித் சர்மா பிசிசிஐ நிர்வாகிகளிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்திருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டார தகவல் தெரிவிக்கின்றது. இதனால் கவாஸ்கரை பிசிசிஐ நிர்வாகிகள் கண்டிக்கும் வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தி இருப்பதாக தெரிகிறது.
எனினும் ரோகித் சர்மா இந்த புகாரை அவரே முன்வந்து அளிக்க வாய்ப்பு இல்லை என்றும் பயிற்சியாளராக இருந்த கம்பீர்தான் இதனை தூண்டி விட்டிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கவாஸ்கர் எல்லை மீறி வீரர்களை விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல் பயிற்சியாளரையும் அவர்களிடம் இருக்கும் குழுவையும் சேர்த்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து கேலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.