search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஈகோவால் ஒரு வீரரின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள்.. சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பதிவிட்ட சசி தரூர்
    X

    ஈகோவால் ஒரு வீரரின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள்.. சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பதிவிட்ட சசி தரூர்

    • சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை
    • சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்

    டி20 கிரிக்கெட்டில் மிக சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.

    மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள சாம்சன், 56.66 என்ற அட்டகாசமான சராசரி வைத்துள்ளார். 2023 டிசம்பரில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சதம் விளாசினார். ஆனால் அதன் பிறகு அவர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆவேசமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "சையத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து சஞ்சு சாம்சன், கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு முன்கூட்டியே கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தற்போது இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 56.66 சராசரி மற்றும் விஜய் ஹசாரே போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் 212*, கடைசியாக தென்னாப்பிரிக்காவுடன் விளையாடியபோது சதம் விளாசிய சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இல்லை. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் ஈகோ பிரச்னையில் ஒரு வீரரின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள்"

    சஞ்சு சாம்சனை வெளியேற்றியதன் மூலம், விஜய் ஹசாரேவின் கால் இறுதிக்கு கூட கேரளா தகுதி பெறவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×