என் மலர்
கிரிக்கெட் (Cricket)
களத்தில் இறங்குனா வெற்றி தான்.. உலகத்தின் முதல் வீரராக ஷிவம் துபே வரலாற்று சாதனை
- ஷிவம் துபே 2019-ம் ஆண்டு இந்திய டி20 அணிக்கு அறிமுகமானார்.
- அவர் களமிறங்கிய முதல் போட்டியில் இந்தியா, வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே. இவர் 2019 நவம்பர் 3-ம் தேதி டெல்லியில் வங்கதேசத்துக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 35 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அவரது முதல் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அவரது 5-வது டி20 போட்டியில், திருவனந்தபுரத்தில் வங்கதேசத்திடம் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆனால், அதன் பிறகு, ஷிவம் துபே இடம்பெற்ற எந்த டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி அடையவில்லை. 2020 ஜனவரியில் நியூசிலாந்தை 5-0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் செய்த இந்திய அணியில் ஷிவம் துபேவும் இடம் பெற்று இருந்தார். அந்த ஐந்து போட்டிகளிலும் அவர் விளையாடினார்.
2024-ல் 15 டி20 போட்டிகளில் துபே விளையாடினார். இதில் டி20 உலகக் கோப்பையில் எட்டு போட்டிகள் அடங்கும். துபே இடம் பெற்ற அந்த போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியில் அவர் ஆரம்பத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 5-வது டி20 போட்டியில் பேட்டிங்கில் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், பந்துவீச்சில் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியும் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.
இந்நிலையில் துபேவின் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்து அவரைப் பாராட்டியது.
"துபே விளையாடினால், இந்தியா வெற்றி பெறும். 30-0 மற்றும் இன்னும் வலுவாகிக் கொண்டே செல்கிறது," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவிற்காக 35 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஷிவம் துபே 26 முறை பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். நான்கு அரை சதங்கள் உட்பட மொத்தம் 531 ரன்கள் குவித்துள்ளார். இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்ததே இந்திய அணிக்கான அவரது சிறந்த ஸ்கோர் ஆகும்.
டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக 24 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். 2019-ம் ஆண்டு நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நான்கு ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.