என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![சாம்பியன்ஸ் டிராபி அணியில் பும்ரா இடம் பெறுவாரா?- நாளை முக்கிய முடிவு எடுக்கும் பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி அணியில் பும்ரா இடம் பெறுவாரா?- நாளை முக்கிய முடிவு எடுக்கும் பிசிசிஐ](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9157266-bumrah10022025.webp)
சாம்பியன்ஸ் டிராபி அணியில் பும்ரா இடம் பெறுவாரா?- நாளை முக்கிய முடிவு எடுக்கும் பிசிசிஐ
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை நாளைக்குள் அறிவிக்க வேண்டும்.
- பும்ரா இடம்பெறுவது குறித்து பிசிசிஐ நாளை முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட மறுப்பு தெரிவித்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான முதற்கட்ட அணியை கடந்த மாதம் இந்தியா அறிவித்தது. இதில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் பந்து வீசாமல் வெளியேறினார். உடனடியாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பந்து வீச வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆனால் ஐந்து வாரங்களுக்கு பந்து வீசாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அவரால் பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
அதேவேளையில் பிப்ரவரி 11-ந்தேதி (நாளை) வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக அறிவிக்க அணியில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடக்கூடிய அணியை அறிவிக்க வேண்டும். அதன்பின் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் தொடருக்கான தொழில்நுட்ப குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மத்தியில் பும்ரா பந்து வீச தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் பாதியை சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்தால் பும்ரா இடம்பெற வாய்ப்புள்ளது. இல்லை என்றால் ஹர்ஷித் ராணா அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படலாம்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ அகாடமியில் பும்ராவின் காயம் குறித்து மருத்துவக்குழு ஆராய்ந்து வருகிறது.
வருகிற 12-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், பும்ரா பெஙகளூரு சென்றுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் தொடரில் பங்கேற்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
என்றபோதிலும், நாளை பிசிசிஐ இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும்போதுதான் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது குறித்து தெரியவரும்.
ஒருவேளை பும்ரா இடம்பெறவில்லை என்றால், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.