என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2009-ம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் தனது முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்யுமா?

- 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை ஆஸ்திரேலியா வென்றது.
- 2009ம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா வெற்றி பெறவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லாகூரில் நடக்கும் இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகினர். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சமீபத்தில் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. இதனால் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபியில் முழு திறமையை வெளிப்படுத்த போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா வெற்றி பெறவில்லை. 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை ஆஸ்திரேலியா வென்றது. அதன் பிறகு 2 சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
ஆகையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் டிராபியில் தனது முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.