என் மலர்
செய்திகள்
முதல்–அமைச்சரை அவதூறாக பேசியதாக வழக்கு: தே.மு.தி.க. நிர்வாகிகள் சேலம் கோர்ட்டில் ஆஜர்
சேலம்:
தே.மு.தி.க.சார்பில் கடந்த 2012–ம் ஆண்டு சேலம் மாவட்டம் தலைவாசலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் தனசேகர் என்பவர் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி தொடர்ந்து வாதாடி வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் தே.மு.தி.க. மாநில பொருளாளர் இளங்கோவன், ஒன்றிய அவை தலைவர் கருப்பழகி, பேரூர் செயலாளர் சக்கரவர்த்தி ஆகிய 3 பேரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று காலையில் 3 பேரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது இருதரப்பு வக்கீல்களும் வாதாடினார்கள்.
இதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11–ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக தே.மு.தி.க. சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த பாபு, பகுதி செயலாளர்கள் தக்காளி ஆறுமுகம், விஜி, ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் மற்றும் வக்கீல் சந்திரசேகர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.