என் மலர்
செய்திகள்
கும்பகோணம் அருகே மதுக்கடை முன் முள்வேலி அமைத்து பொதுமக்கள் போராட்டம்
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே மணிக்குடி கிராமத்தில் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைக்கு மது அருந்த வருபவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மணிக்குடியில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என அந்த கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பல முறை புகார் அனுப்பி உள்ளனர். ஆனால் மதுக்கடை தொடர்ந்து இயங்கி வந்தது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மணிக்குடி கிராம மக்கள் ஒன்று திரண்டு மதுக்கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பனந்தாள் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை மூடும் வரை சாலை மறியல் தொடரும் என கிராம மக்கள் திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து போலீசார் மதுக்கடையை மூடினர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 12 மணி அளவில் மணிக்குடியில் வழக்கம்போல் மதுக்கடை திறக்கப்பட்டது.
இதையடுத்து கிராம மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க செயலாளர் அமிர்தகண்ணன் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது கிராம மக்கள் மதுக்கடைக்கு பூட்டு போட்டனர். பின்னர் கடையின் முன்பகுதியில் முள்வேலி அமைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், மதுக்கடையை மூட விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
நாகை மாவட்டம் நாராயணமங்கலம் கிராமத்தில் மணல்மேடு- மயிலாடுதுறை மெயின்ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்கு நாராயணமங்கலம், வில்லியநல்லூர், தாழஞ்சேரி, கிழாய் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் புதிதாக மதுக்கடை திறக்க இருந்த இடத்தை நேற்று இரவு பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலித்தீர்த்தான், மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல மணல்மேடு அருகே காளி கடைவீதியில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.