search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் காரில் இருந்த 2½ கிலோ தங்கம், ரூ.5 லட்சத்துடன் தப்பிய டிரைவரை பிடிக்க தீவிரம்
    X

    வேலூரில் காரில் இருந்த 2½ கிலோ தங்கம், ரூ.5 லட்சத்துடன் தப்பிய டிரைவரை பிடிக்க தீவிரம்

    வேலூரில் காரில் இருந்த 2½ கிலோ தங்கம், ரூ.5 லட்சத்துடன் தப்பிய டிரைவரை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச் சாரியை சேர்ந்தவர் ஜவரிலால் மகன் மிட்டால்லால் (வயது 40). இவர் கம்மவான்பேட்டையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    மேலும் மிட்டால்லால் வேலூர் பகுதியில் உள்ள பல்வேறு நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து அவர்கள் குறிப்பிடும் மாடல்களில் நகைகள் செய்து சம்பந்தப்பட்ட கடைகளில் கொடுத்து அதற்குரிய பணம் பெற்று வரும் தொழிலும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மிட்டால்லால் தனது கடையில் செய்த தங்க நகைகளை சம்பந்தப்பட்ட கடைகளில் கொடுக்கவும், மேலும் ஏற்கனவே கொடுத்த நகைகளுக்கு உரிய பணத்தை வசூல் செய்யவும் தனது காரில் சென்றார்.

    அப்போது சுமார் 4 கிலோ நகைகளை ஒரு பையில் எடுத்து சென்றுள்ளார். காரை அவரிடம் பணிபுரிந்த குஜராத்தை சேர்ந்த அரி (21) ஓட்டினார். வேலூர்-ஆரணி சாலையில் உள்ள பல்வேறு கடைகளில் மிட்டால்லால் நகைகளை கொடுத்து பணம் பெற்று, அதனை நகைகள் வைத்திருந்த பையில் வைத்துள்ளார்.

    தொடர்ந்து வேலப்பாடியில் உள்ள நகைக்கடை ஒன்றில் மிட்டால்லால் நகை ஆர்டர் வாங்குவதற்காக சென்றார். அப்போது அவர் காரில் இருந்த நகை, பணத்தை பார்த்து கொள்ளும்படி டிரைவரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் மிட்டால்லால் காருக்கு திரும்பி வந்தார். அப்போது ஏற்கனவே நிறுத்தியிருந்த கடையின் முன்பாக கார் இல்லை. மாறாக சுமார் 200 மீட்டர் தொலைவில் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. மிட்டால்லால் காரின் அருகே சென்றார். காரில் டிரைவர் இல்லை. அதனால் சந்தேகம் அடைந்த அவர் பின்பகுதியில் நகை, பணம் வைத்திருந்த பையை பார்த்தார். அங்கிருந்த பையும் காணாமல் போயிருந்தது.

    இதையடுத்து அவர், உடனடியாக டிரைவர் அரியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம், பக்கத்து கடைகளில் உள்ளவர்களிடம் டிரைவர் குறித்தும், அவர் நகைபையை எடுத்து சென்றாரா? எனவும் விசாரித்தார். ஆனால் அவர்கள் எதுவும் தெரியாது என்று கூறினார்கள். பையில் சுமார் 2½ கிலோ தங்க நகைகளும், ரூ.5 லட்சமும் இருந்ததாக கூறப்படுகிறது.

    நகை, பணத்தை பறிகொடுத்த மிட்டால்லால் அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காரை பார்வையிட்டு மிட்டால்லால் மற்றும் அக்கம், பக்கத்து கடைகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில், டிரைவர் நகை, பணம் இருந்த பையை அபேஸ் செய்து தப்பியோடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் காரை கைப்பற்றி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். நகையின் மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வேலூர்-ஆரணி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    டிரைவர் அரியை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. ஆரோக்கியம், இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×