என் மலர்
செய்திகள்
X
கடலில் சிக்கி தவிக்கும் அனைத்து மீனவர்களையும் மீட்போம்: முதல்-அமைச்சர் பேச்சு
Byமாலை மலர்4 Dec 2017 10:01 AM IST (Updated: 4 Dec 2017 10:01 AM IST)
‘கன்னியாகுமரியில் வீசிய புயலால் கடலில் சிக்கி தவிக்கும் அனைத்து மீனவர்களையும் மீட்போம்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கோவை:
கோவை வ.உ.சி. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கி பேசினார். தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை மேடையில் திறந்து வைத்தார். சிறப்பு தபால் உரையும் வெளியிடப்பட்டது.
விழாவில் அரசுத்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட ரூ.691.51 கோடி செலவிலான கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். ரூ.1,328 கோடியே 95 லட்சம் செலவில் 39 பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார். விழாவில், ரூ.118 கோடியே 83 லட்சம் செலவில் 36,650 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் நடுநிலையான தீர்ப்பினால் உண்மையான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. ஜெயலலிதாவின் ஆன்மா நம் பக்கம். கழக கண்மணிகள் அனைவரும் ஒரு அணியில் நின்று எதிர்கொண்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்ன, எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம். இன்னும் நூறாண்டுக்கு மேல் அ.தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஏற்கனவே கூறியுள்ளார். அதை வருகிற தேர்தல் மூலம் அனைவரும் நிரூபித்து காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்புக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆர்.கே.நகர் தொகுதியின் வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம். இந்த தீர்ப்பினால் அ.தி.மு.க. தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களது இயலாமையால் எதை, எதையோ பேசி வருகிறார்கள்.
சமீபத்தில் வீசிய ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் உதயகுமாரை உடனடியாக அங்கு அனுப்பினேன். அவர் அங்கு நேரடியாக சென்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். உடனயாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரையும் அங்கு அனுப்பி வைத்தோம்.
இந்த புயலால் அந்த மாவட்டத்தில் 3 ஆயிரத்து 880 மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. அவற்றை சரி செய்வதற்கு மற்ற மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரம் பணியாளர்களை அங்கு அனுப்பி வைத்து அவற்றை மேற்பார்வையிடுவதற்காக தலைமை பொறியாளரையும், கண்காணிப்பு பொறியாளர்களையும் அங்கு அனுப்பி வைத்து அந்த பணிகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்க செய்யப்படும்.
கன்னியாகுமரி கடலில் மீன்பிடிப்பதற்காக மீனவ மக்கள் சென்றார்கள். திடீரென்று புயல் வீசியது புயல் வீசுவதற்கு முன்பாகவே கடலுக்குள் சென்றவர்கள் அதில் சிக்கிக் கொண்டார்கள். அவர்களை மீட்க உதவி செய்யுமாறு பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு உடனடியாக கோரிக்கை வைத்த உடன் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டார்கள்.
மத்திய அரசு கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக இந்திய கப்பற்படை, கடலோர காவல் படையை சேர்ந்த 15 கப்பல்கள், 4 விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளது. அவற்றின் மூலம் மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அங்கு உடனடியாக சென்று மீனவ குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு, கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் களை தமிழக அரசு மீட்கவில்லை என்ற தவறான தகவலை பரப்பி வருகிறார். தமிழக அரசு மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் பெற்று கடலில் எங்கெங்கு மீனவர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
அதற்காக தான் 3 அமைச்சர்கள் மற்றும் துணை முதல்-அமைச்சர் அங்கு தங்கியிருக்கிறார்கள். எனவே கடலில் மீன் பிடிக்க சென்று சிக்கி தவிக்கும் அனைத்து மீனவர்களையும் மீட்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு மீனவரும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி கூறிக்கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி என்ஜினீயர் ரகுபதி என்பவர் இறந்து விட்டார் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள்.
என்ஜினீயர் ரகுபதி இறந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. ஆனால் அலங்கார வளைவில் மோதி அவர் இறக்கவில்லை. அந்த வழியாக வந்த லாரி மோதி அவர் இறந்துள்ளார். அந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுபோன்ற பொய்யான தகவலை அவர்கள் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இந்த விழா நடப்பதை தி.மு.க.வினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அ.தி.மு.க.வுக்கு பெருகி வரும் செல்வாக்கை குறைப்பதற்காக திட்டமிட்டு இதுபோன்ற பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். அலங்கார வளைவுகளை வைக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இதே கோவையில் தி.மு.க. ஆட்சியில் நடந்த செம்மொழி மாநாட்டின் போது எப்படியெல்லாம் அலங்கார வளைவுகள், கட்-அவுட்கள் வைத்தனர் என்பதை நீங்களே பாருங்கள் என்று கூறி விட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் சில காட்சிகளை போட்டு காட்ட சொன்னார். (அப்போது கோவையில் தி.மு.க. ஆட்சியின்போது நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் பற்றிய படங்கள் திரையில் போட்டு காட்டப்பட்டன). நாங்கள் அலங்கார வளைவுகள் வைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டார்களாம். ஆனால் அவர்கள் அலங்கார வளைவுகளை வைத்தால் பொறுத்துக் கொள்ள வேண்டுமாம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Next Story
×
X