search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி பசுமைச்சாலை பணியில் உறவினர்களுக்கு டெண்டரா? முதல்வர் விளக்க வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    8 வழி பசுமைச்சாலை பணியில் உறவினர்களுக்கு டெண்டரா? முதல்வர் விளக்க வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

    8 வழி பசுமைச்சாலை பணியில் முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் கிளம்பி உள்ளது பற்றி முதல்வர் தான் விளக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததற்கு தமிழக அரசை பாராட்டுகிறேன். இந்த விழாவையொட்டி நடிப்புத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், துணை நடிகர்களுக்கு சிவாஜி பெயரில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் இதனை வெளிப்படுத்தி உள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தை திசை திருப்பியதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் தமிழகத்தில் செயல்படுவதாக நான் பலமுறை குற்றம் சாட்டி வருகிறேன். இப்போது அது வெளிவந்துள்ளது.

    இந்த அமைப்பை தடை செய்வதோடு மட்டுமல்ல, வேருடன் அகற்ற வேண்டும். இதுபோல பல அமைப்புகள் உள்ளன. அவற்றையும் களையெடுக்க வேண்டும். தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் பலியானதற்கு தி.மு.க.வும் காரணம். சட்டசபையில் அவர்கள் இதுபற்றி பேசவில்லை. ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்பது இல்லை, வெளிநடப்பு மட்டுமே செய்கிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை என்று சட்டசபையில் தி.மு.க. கேள்வி எழுப்பவில்லை. இதன் மூலம் இருகட்சிகளுக்கும் மறைமுக கூட்டணி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் 16 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சித்திட்டங்களை அறிவிக்கும்போது எதிர்ப்புகள் வருகிறது. இதை அன்னிய சக்திகள் தூண்டி விடுகிறார்கள். மக்களுக்கு நன்மை எது, தீமை எது என்பது தெரியவேண்டும். முன்னேற்றம் வரவேண்டுமானால் சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழகம் முன்னேறும். வேலைவாய்ப்பு பெருகும். இங்குள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வது தவிர்க்கப்படும்.

    தமிழகத்தில் அமைய உள்ள 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் நல்ல பலன் கிடைக்கும். தமிழகம் முன்னேற்றம் அடையும். இச்சாலை பணியை மேற்கொள்ள முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் கிளம்பி உள்ளது. இதுபற்றி முதல்-அமைச்சர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெறும். அப்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் பலன்களை மக்கள் உணர்வார்கள்.

    குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைந்தால் மாவட்டம் வளர்ச்சி பெறும். துறைமுகத்துக்காக மக்களுக்கு சொந்தமான ஒரு அடி நிலம் கூட எடுக்கவில்லை. அப்படியிருந்தும் ஏன் எதிர்க்கிறார்கள்? என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ் ஆகியோர் உடனிருந்தனர்.  #ponradhakrishnan 

    Next Story
    ×