என் மலர்
செய்திகள்
சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு- மாரியம்மன் கோவிலுக்கு சீதனம் வழங்கிய இஸ்லாமியர்கள்
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தமிழகம்- கர்நாடக எல்லையில் தாளவாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி இஸ்லாமியர்கள் வழிபடும் பெரிய பள்ளி வாசல் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக மாரியம்மன் கோவில் ராஜகோபுரம், விமான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து கோவில் முன் அமைக்கப்பட்டு இருந்த யாக சாலையில் வேத விற்பன்னர்கள் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இஸ்லாமியர்கள் சீதனம் வழங்குவது பாரம்பரியமாக கடை பிடிக்கப்பட்டு வந்தது. சில காலம் இந்த வழக்கம் நடைமுறையில்இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இஸ்லாமியர்கள் 30 பேர் அம்மனுக்கு சேலை, தேங்காய், பழம், இனிப்பு ஆகியவற்றை சீதனமாக கோவிலுக்கு வழங்கினார்கள்.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட பிரசாததத்தை வாங்கி சாப்பிட்டனர். சமய நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்ந்த இந்த நிகழ்ச்சியை கண்டு பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.