search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஐ அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
    X
    சிபிஐ அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

    சாத்தான்குளம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா

    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து ஆகிய 3 போலீசாரையும் 3 நாள் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பின்னர் அவர்கள் 3 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் கொரோனா மற்றும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர விசாரணை குழுவில் உள்ள சி.பி.ஐ. ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுகலா தலைமையிலான அதிகாரிகள் 8 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    பின்னர் அவர்கள் 3 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ஆத்திக்குளத்தில் அலுவலகத்திலும், நேற்று முன்தினம் காலையில் சாத்தான்குளத்துக்கு அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தி, இரவில் மீண்டும் மதுரைக்கு அழைத்து வந்தனர்.

    நேற்று காலையில் மீண்டும் விசாரணை தொடங்கி நடத்தது. இந்த நிலையில் விசாரணை நடத்தும் குழுவில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்தது. ஆனால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்ததாக கூறப்படுகிறது.

    அதை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேரையும் மதுரை ரெயில்வே மருத்துவமனையில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவலில் எடுத்த போலீஸ்காரர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து ஆகிய 3 பேரையும் ஒரு நாள் முன்னதாக நேற்றுடன் விசாரணையை முடித்து, மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக போலீஸ்காரர்கள் 3 பேரையும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அவர்களுக்கும், சி.பி.ஐ. அதிகாரிகள் மற்ற 6 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் அவர்கள் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அலுவலகத்தில் தீயணைப்பு துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. விசாரணை நடந்த அறைகள் மூடப்பட்டன.

    சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா பரவியது எப்படி? என்பது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, காவலில் எடுக்கப்பட்ட போலீஸ்காரர்கள் 3 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் சாத்தான்குளத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகர ஆயுதப்படை போலீசார் சிலர் அவர்களுடன் சென்றிருந்தனர். அதில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் மூலமாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தித்த நபர்கள், சாத்தான்குளத்தில் நடந்த விசாரணையில் இடம் பெற்றவர்கள், உடன் இருந்த அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது சி.பி.ஐ. மற்றும் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சாத்தான்குளம் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×