என் மலர்
செய்திகள்
X
குடிப்பழக்கத்தை கைவிட முடியாத மகனால் மூதாட்டி தற்கொலை - தாய் இறந்த சோகத்தில் கிணற்றில் குதித்த மகனும் பலி
Byமாலை மலர்23 July 2020 7:47 PM IST (Updated: 23 July 2020 7:47 PM IST)
குடிப்பழக்கத்தை கைவிட முடியாத மகனால் மனமுடைந்த மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் இறந்த சோகத்தில் அவருடைய மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்த சீனாபுரம் அருகே கராண்டிபாளையத்தை சேர்ந்தவர் சென்னிமலை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி ருக்குமணி (வயது 70). இவருடைய மகன் முத்துசாமி (40). திருமணம் ஆகவில்லை.
முத்துசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு மேலும் குடிக்க தொடங்கினார். குடிப்பழக்கத்தை கைவிட ருக்குமணி எவ்வளவோ வலியுறுத்தியும் முத்துசாமியால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை.
தன்னுடைய ஒரே மகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விட்டானே என ருக்குமணி வருத்தம் அடைந்தார். மேலும் வயது மூப்புடன் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை காரணமாக ருக்குமணிக்கு உடல் நலமும் சரியில்லாமல் போனது.
இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட ருக்குமணி இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். உடனே அவர் வீட்டின் ஜன்னல் கம்பியில் கயிறு கட்டி அதில் தூக்குப்போட்டு கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த முத்துசாமி தன்னுடை தாய் தூக்குப்போட்டு கொண்டதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனே பதற்றத்துடன் அவர் கயிற்றை அறுத்து தன்னுடைய தாயை மீட்டு வீட்டில் உள்ள தரையில் கிடத்தினார். அப்போது அவர் மூச்சற்று பிணமாக கிடந்ததை கண்டதும் தாயின் உடலில் மீது விழுந்து முத்துசாமி கதறி அழுதார்.
குடிப்பழக்கத்தை கைவிட முடியாத தன்னால்தானே தூக்குப்போட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு தானே காரணமாகி விட்டதை எண்ணி முத்துசாமி மனம் நொந்தார். தாய் தற்கொலை செய்து கொண்டதை தாங்கி கொள்ள முடியாத அவர் அழுது புலம்பினார். தனக்காக உயிரை விட்ட தாய் இல்லாத உலகத்தில் தான் மட்டும் வாழ்ந்து என்ன செய்துவிடப்போகிறோம் என்ற முடிவுக்கு முத்துசாமி வந்தார். மனதை கல்லாக்கி கொண்டு அருகில் உள்ள தண்ணீர் இல்லாத 80 அடி ஆழ கிணற்று பகுதிக்கு வந்தார். வறண்டு கிடந்த அந்த கிணற்றுக்குள் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அடுத்தடுத்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சீனாபுரம் பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Next Story
×
X