என் மலர்
தமிழ்நாடு
இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரியில் 42 கடற்கரை கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கன்னியாகுமரி:
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கலவரம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தீ வைப்பு பஸ் உடைப்பு போன்ற நாச வேலைகளில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கிய தலைவர்களையும் குறிவைத்து தாக்குவதால் இலங்கை அதிபர் மற்றும் பிரதமர், அமைச்சர்கள் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.
இலங்கைக்கு பக்கத்தில் கன்னியாகுமரி கடல் பகுதி இருப்பதால் கடல் வழியாக கலவரக்காரர்கள் ஊடுருவாமல் இருப்பதற்காக குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 110 கிலோ மீட்டர் தூரத்துக்கு 42 கடற்கரை கிராமங்கள் அமைந்து உள்ளன.
இந்த கடற்கரை கிராமங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் வாகனங்களில் தீவிரமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி குமரி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 9 சோதனைச் சாவடிகள் மூலமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் கடலில் படகில் சென்று கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இது தவிர உள்ளூர் போலீசார் லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கிறார்களா? என்றும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.